தாயின் மகிழ்ச்சியே குழந்தையின் ஆரோக்கியம் - தீபிகா
Birth of Putchi

தாயின் மகிழ்ச்சியே குழந்தையின் ஆரோக்கியம் - தீபிகா

கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்கு பிறகு குழந்தைக்கு பாலூட்டும் சமயங்களிலும் பல பெண்கள் அவர்களின் ஆடை விஷயத்தில் அசவுகரியத்தை உணர்கிறார்கள். தன்னுடைய குழந்தைப்பேறு காலத்திலும் இதே பிரச்சினையை சந்தித்த தீபிகா, தனக்கான உடைகளை தையல் கலைஞரின் உதவியுடன் தயாரித்தார். அவற்றை அணிந்தபோது சவுகரியமாக இருப்பதை உணர்ந்தார். தன்னைப்போல மற்ற பெண்களும் தாய்மையை சவுகரியமாக அனுபவிக்க வேண்டும் என்று எண்ணினார். சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்த அவர், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்களுக்கான பிரத்யேக ஆடைகள் தயாரிப்பதையே தன்னுடைய தொழிலாக தேர்ந்தெடுத்தார். தற்போது இந்த துறையில் வெற்றிகரமாக இயங்கி வரும் அவரது பேட்டி.

“என்னுடைய பூர்வீகம் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம். இப்பொழுது குடும்பத்துடன் கோயம்புத்தூரில் வசித்து வருகிறேன். பி.எஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் படித்திருக்கிறேன். திருமணத்துக்கு பிறகு கணவருடன் ஆஸ்திரேலியாவில் குடி பெயர்ந்தேன். மீண்டும் தமிழ்நாட்டுக்கு திரும்பியதும் சொந்தமாக ஏதேனும் தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

என்னுடைய மகப்பேறு காலத்தில் நான் அணிவதற்கு ஏற்ற சவுகரியமான ஆடைகள் கிடைக்கவில்லை. கர்ப்பிணிகளுக்கு என்று சந்தையில் விற்கப்பட்ட ஆடைகள் மிகவும் தளர்வாக இருந்தன. அதனால் எனக்கு பிடித்த வகையில் தையற்கலைஞரிடம் ஆடைகள் தைத்து வாங்கி அணிந்தேன். அந்த சமயத்தில் எனது நெருங்கிய தோழிகளும் கர்ப்பமாக இருந்தார்கள். அவர்களும் இதே பிரச்சினையை சந்தித்து கொண்டிருந்தார்கள். எனவே அவர்களுக்கும் உடைகள் வடிவமைத்து கொடுத்தேன். அப்போதுதான் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்களுக்கான ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கும் யோசனை வந்தது. கணவருடன் இதுபற்றி ஆலோசித்தேன். அதைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு நானும், எனது கணவரும் இணைந்து எங்களுடைய நிறுவனத்தை தொடங்கினோம்.

கர்ப்பகாலத்திலும், பாலூட்டும் சமயத்திலும் எல்லா வகையான ஆடைகளையும் பெண்கள் அணிய முடியுமா?

கர்ப்பகாலம் மற்றும் பாலூட்டும் சமயத்தில் அணியும் ஆடைகளில் இரண்டு விஷயங்களை முக்கியமாக கவனிக்க வேண்டும். ஒன்று, கர்ப்பகாலத்தின் போது பெண்களின் வயிறு பகுதி பெரியதாக இருக்கும். இரண்டு, பிரசவத்துக்கு பின்பு குழந்தைக்கு பாலூட்ட வேண்டும். இந்த இரண்டு விஷயங்களுக்கும் சவுகரியமாக இருந்தால், பெண்கள் எந்த வகையான ஆடைகளையும் அணிய முடியும்.

மகப்பேறு காலத்தில் அணியும் உள்ளாடைகள் மற்றும் சானிட்டரி நாப்கின்கள் குறித்து சொல்லுங்கள்?

பிறந்த குழந்தை பெரும்பாலும் தாயின் அரவணைப்பிலேயே இருக்கும். எனவே இந்த சமயத்தில் தாய் அணியும் ஆடைகளிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதில் உள்ள ரசாயனம் குழந்தைக்கு எந்தவிதமான பாதிப்பையும் உண்டாக்கக்கூடாது. மகப்பேறு காலத்தில் அணியும் உள்ளாடைகள் தயாரிக்க முடிவு செய்தபோது, இதை மனதில் கொண்டே செயல்பட்டோம். மூங்கில்களைக் கொண்டு துணி இழைகளை தயாரித்தோம். இயற்கையாகவே மூங்கிலில் மருத்துவ குணங்கள் இருக்கிறது. அதன் மூலம் தயாரிக்கப்பட்ட துணிகளை அணியும்போது ஒவ்வாமை போன்ற சரும பிரச்சினைகள் ஏற்படாது.

பிரசவ காலம் முடிந்த பிறகு மாதவிடாய் ஏற்படும்போது ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். சாதாரண நாட்களில் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களை இந்த நேரத்தில் பயன்படுத்த முடியாது. எனவே பிரசவித்த பெண்களுக்கு உதவும் வகையில், மெட்டர்னிட்டி பேடுகளை தயாரித்தோம். இவை முழுவதும் பருத்தி பஞ்சைக்கொண்டு தயாரிக்கப்பட்டவை. எளிதாக மக்கும் தன்மை கொண்டவை. எனவே இவற்றால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எனது சொந்த அனுபவத்தில், எனக்கு என்ன தேவை என்று நினைத்தேனோ, அதைதான் மற்ற பெண்களுக்காக தயாரித்து வருகிறேன்.

நான் தயாரிக்கும் ஆடைகளை அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண்களும் அணியலாம். இவர்கள் சற்றே தளர்வாக இருக்கும் ஆடைகளை அணிவது நல்லது. கொரோனா காலகட்டத்தில் தான் எங்கள் நிறுவனத்தை ஆரம்பித்தோம். அதை தொடங்கிய பத்து நாட்களுக்குள் ஊரடங்கு போடப்பட்டது. இருந்தபோதும் இணையம் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் எங்கள் தயாரிப்புகளுக்கு வரவேற்பு கிடைத்தது.

குடும்பத்தை கவனித்துக்கொண்டு தொழிலிலும் எவ்வாறு ஈடுபட முடிகிறது?

எங்கள் நிறுவனத்தை ஆரம்பித்தபோது எனது மகன் ஆறு மாத குழந்தையாக இருந்தான். வீட்டில் அவனை கவனித்துக்கொள்ள யாரும் இல்லாததால், குழந்தையையும் உடன் வைத்துக்கொண்டே நிறுவனத்துக்கான வேலைகளில் ஈடுபட்டேன். கணவர் எல்லா வகையிலும் எனக்கு ஆதரவாக இருக்கிறார். அதனால் குடும்பத்தையும், நிறுவனத்தையும் எளிதாக பார்த்துக் கொள்ள முடிகிறது.

இந்த துறையில் உங்களை நெகிழ வைத்த தருணம் ஏதேனும் உண்டா?

எங்களுடைய இணையதளத்தில் எங்களது தயாரிப்புகளை பற்றிய தகவல்கள் மட்டுமில்லாமல், மகப்பேறு காலத்தைப் பற்றிய நேர்மறையான பல விஷயங்களை பதிவிட்டு வந்தோம். ஒருநாள் எங்கள் நிறுவனத்திற்கு ஒரு நபரிடம் இருந்து கடிதம் ஒன்று வந்தது. அதில், அவரது மனைவி மகப்பேறு காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்திருந்தார். எங்கள் இணையதளத்தில் பதிவிட்டு இருந்த தகவல்கள், அந்தப் பெண் மனஅழுத்தத்தில் இருந்து வெளிவருவதற்கு ஊக்கம் அளித்ததாக எழுதி இருந்தார். ‘எனது மனைவி, எனக்கு திரும்ப கிடைக்க மறைமுகமாக உதவியுள்ளீர்கள். அதற்கு நன்றி’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிகழ்வை என்னால் மறக்க முடியாது.

உங்களுக்கு கிடைத்த அங்கீகாரங்கள் பற்றி சொல்லுங்கள்?

ஷி அவார்ட்ஸ், கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் சார்பில் ‘சிறந்த பெண் தொழில் முனைவருக்கான விருது’ ஆகியவற்றை பெற்றிருக்கிறேன்.

எதிர்காலத்தில் நீங்கள் செய்ய விரும்புவது என்ன?

எங்களுடைய தயாரிப்பில் மீதமாகும் துணிகளைக் கொண்டு சிறிய காதணி, பை, கிளிப் போன்றவற்றை தயாரிப்பதற்கு ஆதரவற்ற பெண்களுக்கு உதவி வருகிறோம். இதன் மூலம் அவர்களுக்கு சிறிய அளவில் வருமானம் கிடைக்கிறது. வருங்காலத்தில் இதை பெரிய அளவில் செய்ய வேண்டும் என்பது என்னுடைய ஆசையாகும்.

மகப்பேறுக்கு பிறகு குழந்தை வளர்ப்பு, குடும்ப பொறுப்புகள் என்று பலவற்றை பெண்கள் சந்திக்க நேரிடும். இவை அனைத்தையும் சமாளித்து, தன்னையும் கவனித்துக் கொள்ளும் ஆற்றலை பெண்கள் பெற வேண்டும். சுய தொழிலில் ஈடுபடும் பெண்கள் பல்வேறு தடைகளை சந்திக்க நேரிடும். தயக்கம் இல்லாமல் அவற்றை தாண்டி வெளியே வர வேண்டும்.
Tags: